நெருப்பு – II

என்ன சொல்வது?
என்ன வெளிப்படுத்துவது?
என்ன செய்வது?

உன்னை கண்டிப்பதா?
அதற்கான தகுதி எனக்கு உண்டா?
உனக்காகக் கதறி அழுவதா?
தன்னை நொந்து கொள்வதா?
நம்மை நொந்து கொள்வதா?
ஆவேசம் கொள்வதா?
அடங்கி விடுவதா?

என்ன செய்வது?

சொற்கள்…
சொற்கள் மட்டுமே போதுமா?

மூலக்கொத்தளத்தில் உறங்குபவன்
அன்று எரிய விட்ட தீயின் ரணமே
இன்றளவும்
அவ்வப்பொழுது
நினைவில் எழும்பி
இதயம் கிழித்துக் கடக்கும் பொழுதில்…
நீ…
நீ ஏன் இப்படிச் செய்தாய்…?

மொத்தமாய் மரத்து விட்ட சமூகம்
உன் உடல் தின்ற
நெருப்பினால் உணர்வு பெறும் என்றா?
உணர்வு…
உணர்வு பெறுமா சமூகம்?
உணர்வு பெறுவார்களா மக்கள்?
அது நடக்குமா?
என்றேனும் நடக்குமா?

நான் நம்ப விரும்புகிறேன் செங்கொடி…
நடக்கும் என நம்ப விரும்புகிறேன்.
உனக்காக நம்ப விரும்புகிறேன்…

விசும்பல்கள் மாத்திரமே ஒலித்தாலும்,
வீர வசனங்கள் மாத்திரமே ஒலிக்கும்
என இரண்டாண்டுக்கு முந்தைய நிகழ்வுகள்
மூளையில் அறைந்து சொன்னாலும்,

உனக்காக…
அருமை செங்கொடி…
அன்பு மகளே…
உனக்காக நான் நம்ப விரும்புகிறேன்…
உணர்வு பற்றும்…
உனதுடல் தின்ற தீயின் ஆவேசத்தோடு
நாடு முழுதும் பற்றியெறியும்
என நம்ப விரும்புகிறேன்.
நம்புவேன்.

ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது?

கடந்த வெள்ளியன்று வெளியான ‘ஆரக்க்ஷன்’ (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில அமைப்பினர் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆரக்க்ஷன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு எதிரே கடந்த இரு தினங்களில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியுள்ளனர். பா.ம.க-வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்திரைப்படம் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவும் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் கூறி வருகின்றன. தடை செய்த மாநில அரசுகளோ, சட்டம் ஒழுங்கை திரைப்படம் சீர்குலைத்து விடுமென கூறுகின்றனர். உண்மையில், ஆரக்க்ஷன் எதிர்க்கப்பட வேண்டிய படமா? இத்திரைப்படம் தலித்துகளுக்கு எதிரானதா? சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடியதா?

முதலில் திரைக்கதையை சுருக்கமாகப் பார்ப்போம். பிரபாகர் (அமிதாப்) எனும் ஒரு தனியார் கல்லூரி முதல்வர், கல்வியை தொழிலாக அல்லாமல் சேவையாகக் கருதுகிறார். வறிய, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக தனிப்பட்ட வகுப்புகள்(tuition) நடத்தியும், உதவிகள் செய்தும் முன்னேற்றுகிறார். இதன் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் உள்ள சில முதலாளிகளுக்கும், அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்கும் ஆளாகிறார். இந் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பு வருகிறது. இதற்கான எதிர்ப்புக் குரல்களும், ஆதரவுக் குரல்களும் கல்லூரிக்குள்ளும் அரங்கேறத் துவங்குகின்றன.

இதனிடையே துணை முதல்வர் மித்திலேஷ் (மனோஜ் பாஜ்பாய்) தனியே கோச்சிங் சென்டர்கள் நடத்தி வருவதைக் கண்டறியும் பிரபாகர், மித்திலேஷின் மீது நடவடிக்கை எடுக்க முனைகிறார். ஆனால், மாநிலக் கல்வி அமைச்சருடனும், சில கல்லூரி நிர்வாக முதலாளிகளுடனும் கைகோர்த்துள்ள மித்திலேஷ், பிரபாகரை வெளியேற்றத் திட்டமிடுகிறான். பிரச்சினை முற்றுகிறது. இதனையொட்டி பிரபாகரை பேட்டியெடுக்க வரும் ஒரு பத்திரிக்கையாளரிடம், தான் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக பிரபாகர் தெரிவிக்கிறார். பத்திரிக்கையோ பிரபாகர் தமது கல்லூரியில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவிருப்பதாக எழுதுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் மித்திலேஷ் முதலானோர் பிரபாகரை வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். பிரபாகரும் வெளியேறுகிறார். அவரது நண்பரது குடும்பத்தினர் வசிப்பதற்காக அவர்  அளித்த வீட்டில், மித்திலேஷ் சாதுர்யமாக தனது கோச்சிங் சென்டரை அமைக்கிறான். தனது வீட்டை பறிகொடுக்கும் பிரபாகர், இலவசமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம், கல்வி வணிகமயமாவதற்கு எதிராகப் போராடி வெல்கிறார்.

இடஒதுக்கீடு எதிர்ப்பு, கல்வி வியாபாரம் ஆகிய இரு ஆதிக்க சாதி-உயர் வர்க்கக் கண்ணோட்டங்கள், மனோபாவங்கள், போக்குகளுக்கு எதிராக வெளிவந்துள்ள மேற்கூறிய திரைக்கதை கொண்ட திரைப்படத்தைதான் தலித் எதிர்ப்பு, இடஒதுக்கீட்டு எதிர்ப்புத் திரைப்படம் என எதிர்க்கிறார்கள். உண்மையில், இத்திரைப்படத்திற்கு எதிராக பா.ஜ.கவினரும், அன்று மக்களை பரிதவிக்க விட்ட AIIMS மாணவர்களும், தெருக்கூட்டும் போராட்டம் நடத்திய ‘Youth for Equality’ குலக்கொழுந்துகளும் தான் போராடியிருக்க வேண்டும். ஆனால், வேடிக்கை என்னவென்றால், இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிப் போராடும் பகுஜன் சமாஜ், வி.சி, பா.ம.க தொண்டர்கள் இத்திரைப்படத்தை தடை செய்யப் போராடுகின்றனர்.  நேற்று மதியம் சென்னை ஈகா தியேட்டரில் புகுந்த பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் திரையிடலுக்கு எதிராகக் கலகம் விளைவிக்க, மீதமிருந்த காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ‘கற்பி, ஒன்று சேர், கலகம் செய்’ என்றார் அம்பேத்கர். ‘கற்பி’ எனும் சொல்லும், பொருளும் மட்டும் உ.பி முதல் தமிழகம் வரை தலித்தியப் பிழைப்புவாதிகளால் ஒருமித்தமாக ‘தீண்டத்தகாத’ பொருளாக ஒதுக்கப்பட்டு விட்டது. அதன் விளைவாக், பஜ்ரங் தள் செய்ய வேண்டிய ‘சமூகப் பணியில்’ பகுஜன் சமாஜ் கட்சி ஈடுபடும் அவலத்தை நாம் காண நேர்ந்திருக்கிறது.

இந்த கண்மூடித்தனமான ஆர்ப்பாட்டங்களுக்கு தேசிய பட்டியலிடப்பட்ட சாதியினர் கமிஷனின் தலைவர் பி.எல்.புனியாவின் கருத்துக்கள்தான் அடிப்படையாக விளங்குகின்றன. புனியா திரைப்படத்தைக் கண்ணையும், காதையும் திறந்து வைத்துதான் பார்த்தாரா என உண்மையிலேயே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், அவர் சர்ச்சைக்குரியதாகக் குறிப்பிடும் காட்சிகள் அனைத்திலும் சாதி வெறிக்கு சரியான பதிலடி தரப்படுகிறது. காட்சிக் கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்டோரின் நியாயம் வலியுறுத்தப்படுகிறது. அதன் பிறகும், புனியா முன்வைத்த அடிப்படையற்ற கருத்துக்களை முன்வைத்துதான் தற்பொழுது மடத்தனமான ஆர்ப்பாட்ட அக்கப்போர்களை அரங்கேற்றி வருகின்றனர்.

உதாரணங்களாக, திரைப்படத்தின் முதல் பாதியில், தீபக் குமார் (சயீப் அலி கான்) இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதங்களை ஆவேசத்துடனும், கூர்மையாகவும் தவிடுபொடியாக்குகிறார். பிரபாகர் இடஒதுக்கீட்டின் நியாயத்தை அழுத்தமாகவும், ஆழமாகவும் எடுத்துரைக்கிறார். பல்வேறு கதாபாத்திரங்களின் மூலமாகவும், சம்பவ அமைப்புகள் மூலமாகவும் இடஒதுக்கீடு குறித்த விவாதம் திரைக்கதையினூடாகக் கட்டியமைக்கப்படுகிறது.

தீபக் குமார், மித்திலேஷ், சுசாந்த் (பிரதீக்) ஆகியோருக்கிடையில் நடைபெறும் விவாதத்தில், கஷ்டப்பட்டு முன்னேறுமாறு நக்கலாக சாடுகிறான் மித்திலேஷ். “கஷ்டப்படுவதைப் பற்றி எங்களுக்கு கூறுகிறாயா? உனக்கு சவரம் செய்யவும், உடை வெளுக்கவும், உனது உள்ளாடைகளைக் கூட வெளுக்கவும், நாற்று நடவும், பாரம் சுமக்கவும், மாடு அறுக்கவும் நூற்றாண்டுகளாக உழைத்து உழைத்து ஓடாகத் தேயும் எங்களுக்கு, கஷ்டப்படுவதைப் பற்றி நீ கூறுகிறாயா?” என தீபக் கேட்கும் பொழுது, “வெட்டுப்பட்டு செத்தோமடா மேலவளவுல…” பாடல்தான் நினைவுக்கு வந்தது. தகுதியை வைத்து போட்டியிடு, ஏன் ஒதுக்கீடு கேட்கிறாய் என சுசாந்த் வினவ, “உண்மைதான். போட்டி போடலாம். ஆனால், பந்தயமென்றால் ஒரே கோட்டில் நின்றுதான் ஓடத் துவங்க முடியும். எனது சகோதரன் மலத்தை அள்ளி சுமந்து, சுத்தம் செய்து விட்டு வந்துதான் படிக்க முடியும். எனது சகோதரி  அன்றாடம் பத்து மைல் நடந்து பத்துக் குடம் தண்ணீர் சுமந்து வந்த பின்னால்தான் புத்தகத்தைத் தொட முடியும். நீ அலுங்காமல், குலுங்காமல் காரில் வந்திறங்கி படிப்பாய். இதுதான் சமமான போட்டியா?” என பதிலிறுப்பான் தீபக்.

பிறிதொரு காட்சியில், இலவசமாகப் பாடம் நடத்தும் பிரபாகரிடம் சில பெரிய மனிதர்கள் தமது பிள்ளைகளுடன் வந்திறங்கி தமது பிள்ளைகளுக்கு மட்டும் தனி வகுப்பு நடத்துமாறும், ஏனெனில் மற்ற பிள்ளைகள் அருகில் வந்தாலே நாறுகிறதென்றும் கூறுகின்றனர். “உங்கள் சிந்தனைதான் நாறுகிறது. எனக்கு எல்லா மாணவர்களும் ஒன்றுதான். எல்லோருக்கும் ஒரே வகுப்புதான்” என்பார் பிரபாகர். பிரபாகருக்கும், தீபக்கிற்குமான உரையாடலில் தீபக், பிரபாகரின் நடுநிலைமையை தனது தீர்க்கமான கேள்விகளால் சுட்டெரிப்பான். பிரபாகரின் மகள் (தீபிகா படுகோன்) கசப்புணர்வை மறக்கக் கூடாதா என வினவ, “இது நூற்றாண்டுகளாக எம்மை வாட்டும் துயரம்.” என பதிலளித்து விலகுவான் தீபக். பிரபாகருக்கும், அவரது மகளுக்கும், அவரது மனைவிக்கும் இடையில் நடைபெறும் விவாதங்களில் ‘மேன்மக்களின்’ இடஒதுக்கீட்டு எதிர்ப்பை சுருக்கமாகவும், ஆழமாகவும் மறுத்துரைப்பார் பிரபாகர்.

தீபக் குமார் ஆக்ரோஷமாக முன்வைக்கும் கருத்துக்கள் இந்தி வணிக சினிமாவில், ஏன், இந்தியாவில் எந்த வணிக சினிமாவிலும் நாம் ஒருபோதும் காணாதது. அதுவும், ஆதிக்க சாதித் திமிர்க் கோலோச்சும் வட மாநிலங்களில், இத்தகைய வசனங்கள், தடை செய்யப்படாத இடங்களிலாவது ஒலிக்கும் என்று நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே வேளையில், கருத்தாக்க ரீதியாகவே திரைப்படத்தின் கருத்துக்களில் குறிப்பிடத்தக்கதொரு தவறும் இருக்கிறது. அதாவது, அரசு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகுவதும், அதன் மூலம் கல்வி வணிகமயமாதல் நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க அரசு ஒடுக்கப்பட்ட சாதியின மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலம் இடஒதுக்கீட்டை படிப்படியாக கடந்து வரலாம் என்ற கருத்தும் இலை மறை காயாக முன்வைக்கப்படுகிறது. திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியரும் அக்கருத்தை ஒரு செய்தியில் வெளிப்படுத்துகிறார்.

அடிப்படையில், தனியார்மயம்-தாராளமயக் காலகட்டத்தின் மாறிய கல்விக் கொள்கைகள் காரணமாகவே, உள்நாட்டு கல்வி வியாபாரிகளையும், பன்னாட்டு கல்வி வியாபாரிகளையும் கொண்டு கல்வியைச் சந்தைமயப்படுத்துவது, அரசு படிப்படியாக விலகிக் கொள்வது எனும் உலக வங்கியின் கட்டளைக்கேற்பவே, கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டது. இன்று புற்றீசல்களாக பெருகியும் நிற்கிறது. இதற்கு இடஒதுக்கீட்டைக் காரணமாக்குவது ஆதிக்கசாதி-உயர் வர்க்கத்தினரின் கல்விச் சந்தை நோக்கிய நகர்வுக்கு நியாயம் கற்பிப்பதாக அமைகிறது. அதே வேளையில், தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டுமா என்பதிலும் திரைப்படம் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.

எனவே, திரைப்படத்தின் இரண்டாம் பகுதி கல்வி வணிகமயமாதல் போக்கை பொதுவில் எதிர்க்கும் சில கருத்துக்களை முன்வைத்தாலும், முதல் பாதியில் உள்ள தெளிவான இடஒதுக்கீட்டு ஆதரவு நிலையிலிருந்து நழுவி, குழப்பத்துடனும், தயக்கத்துடனும் நகர்ந்து செல்கிறது. வேறு வழியின்றி, கற்பனையான முடிவில்லாத முடிவுக்கு, செயற்கையான தீர்வாக கல்லூரியின் நிறுவனர் மீண்டும் பிரபாகரை கல்லூரி முதல்வராக்குவதாகவும், அவர் அங்கே இலவசமாக ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதாகவும்  முடிவடைகிறது. முதல் பாகத்தில் அழுத்தமாகக் கட்டியமைக்கப்படும் திரைக்கதை, பிற்பாதியில் ‘சினிமாத்தனமாக’ முடிவுறுவது தற்செயலானதல்ல. மாறாக, உள்ளடக்கரீதியாக எடுத்துக் கொண்ட இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை அதன் ஒட்டுமொத்தத்தில் ஆய்வு செய்வதிலும், அதற்கான சரியான தீர்வுகளை நோக்கிப் பயணிப்பதிலும் உள்ள கண்ணோட்டப் பிரச்சினையே காரணமாக விளங்குகிறது. அதே வேளையில், திரைப்படத்தை உள்வாங்காமல் இக்கருத்தை விவாதிப்பது சாத்தியமில்லை. ஆனால், இங்கே என்ன நடைபெறுகிறது? தலித்துகளையும், இடஒதுக்கீட்டையும் இழிவுபடுத்துவதாக கிளப்பி விடப்பட்டுள்ள ஒரு வதந்தியின் விளைவாக திரைப்படத்தைக் காண்பதே சிக்கலாகியுள்ளது.

படத்தின் திரைக்கதை ஆசிரியர் அஞ்சும் ராஜாபாலி ஒரு செய்தியில் குறிப்பிடுகிறார். “இத்திரைப்படம், சாதியம் எனும் பழைய தீராத காயத்தை நேரடியாக எதிர்கொள்கிறது. அதன் விளைவாக, நமது சமூகத்தில் காலங்காலமாக நிலவும் பல்வேறுபட்ட தப்பெண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சிகளையும் திரைப்படம் எதிரொலித்தாக வேண்டியுள்ளது. இல்லையேல், ஒரு ஊக்கமான விவாதம் சாத்தியப்படாது. திரைப்படத்தின் நாடகத்தன்மையின் மீதோ, மக்களது கவனத்தை ஈர்ப்பதற்கான அதன் இயலாமை குறித்தோ, பலருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை திரைப்படம் சரியாகவே விவாதிக்கிறது. “

இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை இத்திரைப்படம் சரியாகவே விவாதிக்க முயல்கிறது என்று சொல்லலாம். ஆம், இது ஒரு முழுநிறைவான திரைப்படம் அல்ல. ஆனால், ஒரு அவசியமான விவாதத்தை ஒடுக்கப்பட்டோர் தரப்பில் நின்று எழுப்புவதற்கான கூறுகளைக் கொண்ட திரைப்படம். ஆனால், அப்படியொரு விவாதத்திற்கான சாத்தியப்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு விட்டன என்பதைத்தான் தற்பொழுது காண்கிறோம். இத்திரைப்படம் உண்மையில் அனைவரும் காண வேண்டிய திரைப்படம் என்பது மாத்திரமல்ல, பரவலாக பிரபலப்படுத்தப்பட வேண்டிய படமும் கூட. முற்போக்காளர்கள் இத்திரைப்படத்திற்கு எதிராக அல்ல, மாறாக திரைப்படத்தை மொழி மாற்றம் செய்து வெளியிட்டு பரவலாக கொண்டு செல்லவும், மாணவர்களுக்கு இலவசக் காட்சிகள் ஏற்பாடு செய்யக் கோரியும் தான் போராட்டம் நடத்த வேண்டும். அவ்வகையில், நிகழ்ந்து கொண்டிருக்கும் கண்மூடித்தனமான எதிர்ப்பை, எதிர்த்து முறியடிக்க வேண்டும். சில மாநில அரசுகள் சொல்வது போல் இத்திரைப்படம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக முன்வைக்கும் கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு கெடும் என்றால், அத்தகைய அநீதியான சட்டம் ஒழுங்கு கெடுவதே மக்களுக்கு நல்லது.

மேலும் படிக்க:

1. ‘தி இந்து’ நாளேட்டில் வெளியான ஷர்மிளா தாகுரின் கட்டுரை (ஆங்கிலம்)

2. வினவில் வெளியான தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

வக்காலத்து

“பொய் சொன்னதுதான் தவறு. மற்றபடி, பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் தானே. அவரை துரோகி, சதிகாரன் என்றெல்லாம் கருத தேவையில்லை.” – K.R.அதியமான்

“அவரால் சிலர் பண விசயத்தில் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பது தவிர்த்து முற்றிலுமாக ஏமாற்றப்பட்டதாக எதுவும் இல்லை.” – கோவி.கண்ணன்

“உங்களுக்கு இப்போது அந்த பணத்தை திருப்பி புரட்டி கொடுத்துவிட்டார்தானே ?” – செந்தழல் ரவி

அடடா, என்ன ஒரு நியாய உணர்ச்சி? ஏண்டா திருடினாய் என்று கேட்டால், அதான் திருப்பி கொடுத்தாயிற்றே என்கிறார்கள்! Money Management தான் கோளாறு என்பவர்கள், ஒரு பதிவருக்கு உதவி செய்ய வசூலித்த பணத்தில் Mismanagement செய்வதை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்?  நடுநிலைமை வகிப்பதாக நாடகம் போடுவதற்கும், வெட்கமின்றி வக்காலத்து வாங்குவதற்கும் இடையில் மெல்லிய இடைவெளிதான் உள்ளது. உண்மையில் நடுநிலைமை வகிப்பவர்கள் ஒன்றா வாயை மூடிக் கொள்ள வேண்டும், அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பால் நிற்க வேண்டும். இல்லையேல், அவர்களின் சொற்களில் வெளிப்படுவது அயோக்கியத்தனத்தின் வக்காலத்து மட்டுமே.

கரை தொடும் அலைகள் #1

மீபத்தில் இலண்டனில் தாய்ப்பால் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீம்களை ஒரு நிறுவனம் மிகுந்த விளம்பரங்களுக்கிடையில் விற்றுள்ளது. முதல் நாளே எக்கச்சக்கமாக ஐஸ்க்ரீம்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம். எனினும், பின்னர் அரசு தலையிட்டு தற்காலிகமாக விற்பனையை தடுத்து நிறுத்தியுள்ளது. சோதனைகளின் பின்னரே விற்பனையை அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளது. தாய்ப்பாலில் உள்ள கொழுப்புச் சத்துக்காகவே ஐஸ்க்ரீம்களில் தாய்ப்பால்  கலக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுடைய முழு உடன்பாட்டுடனேயே ‘தயாரிப்பு’ நடைபெறுவதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்க்ஸ் குறிப்பிட்ட  ‘சரக்குமயமாதல்’ (commodification) என்பதன் தீர்க்கமான உதாரணம் இதுதான். நுகர்வின் அகோரப் பசியில், கருப்பை தொடங்கி தாய்ப்பால் வரை அனைத்தும் சரக்காகி விட்டது.  உலகம் முழுவதும் பால் உற்பத்தி அபரிமிதமாக இருந்து வருகிறது. சில நாடுகளில் பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாமல், பாலை வீதியில் கொட்டும் போராட்டங்களும் சமீபத்தில் நடந்தேறின. இத்தகைய சூழலில், தாய்ப்பால் ஐஸ்க்ரீம்களின் தேவைதான் என்ன?  இத்தகைய அரிய ‘கண்டுபிடிப்புகளை’, சீக்கிரத்தில் அலுத்து விடும் மேட்டுக்குடி நுகர்வோர்களின், புதிய புதிய ருசிகளை நாடும் அடங்காத ரசனைகளுக்கு தீனி போடுவதற்காக,  முதலாளித்துவம் நிகழ்த்துகிறது. சந்தையில் போட்டியை சமாளிக்க விதவிதமான சரக்குகளை உருவாக்க முயலும் முதலாளித்துவ மூளை,  இன்னும் என்னென்ன மனித விரோதத் தன்மைகளை அடையுமோ?

நேபாளத்தில் ஐக்கிய மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் கட்சியின் (ஐ.மா.லெ.க) ஜலாநாத் கனால் தலைமையில், ஐக்கிய நேபாளக் கம்யூனிஸ்டுக் கட்சி [மாவோயிஸ்ட்]-ன் (ஐ.நே.க.க [மா]) ஆதரவுடன் புதிய அரசு பதவியேற்றுள்ளதை நாம் அறிவோம். இதன் மூலமாக, மாதவ்குமார் நேபாள் பதவி விலகலுக்குப் பின்னர், பல மாதங்களாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டது. ஆனால், நேபாளக் காங்கிரசும், ஐ.மா.லெ.க-வின் வலதுசாரிப் பிரிவினரும், அவர்களுக்குப் பின்னிருந்து இயக்கும் இந்திய அரசும், எத்தனை காலம் புதிய அரசை இயங்க விடுவார்கள் என்பது ஐயத்திற்கிடமானதே. மேலும், புதிய அரசியல் சட்டம் நிறைவேறுமா, அரசு மற்றும் மாவோயிஸ்டுப் படைகளின் ஒருங்கிணைப்பு நடந்தேறுமா என கேந்திரமான பிரச்சினைகள் கேள்விக்குரியதாகவே நீடிக்கின்றன. கடந்த சில நாட்களில் இந்து நாளிதழ் வெளியிட்ட விக்கிலீக்ஸ் ஆவணங்களில், இந்திய அரசின் தலையீடுகளையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எவ்வாறு இந்தியாவின் தலையீட்டுடன் உடன்பட்டு ஒத்திசைந்து வருகிறது என்பதையும் தெளிவாகக் காணலாம்.

நேபாள மாவோயிசக் கட்சியிலும் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் அக்கட்சியின் விரிவாக்கப்பட்ட பிளீனம் நடைபெற்றது. இப் பிளீனத்தில், நேபாளத்தில் உள்நாட்டு எதிரிகளை முன்னிலைப்படுத்தி போராட்டங்களை எடுப்பது, இந்தியாவின் தலையீட்டை முன்னிலைப்படுத்துவது, புரட்சியின் தற்போதைய கட்டம் முதலான பல்வேறு அம்சங்களில் கட்சியின் தலைவர் பிரசந்தா, துணைத் தலைவர்கள் பாபுராம் பட்டாராய், கிரண் ஆகியோரிடையே மாறுபட்டக் கருத்துக்கள் வெளிப்பட்டன. மூவரும் தனி அறிக்கைகள் மூலம் தமது கருத்துக்களை விரிவாக முன்வைத்தனர்.

7000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட பிளீனத்தில் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்படாத நிலையில், குறிப்பான கருத்து வேறுபாடுகளின் மீதான இறுதி முடிவை மத்தியக் காரியக் கமிட்டி எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதே வேளையில் பெரும்பான்மை அடிப்படையில், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, ஐ.நே.க.க(மா) செயல்பட்டு வருகிறது.  பின்னர், கிரண் மற்றும் பிரசந்தாவின் அறிக்கைகள் ஒன்றிணைக்கப்பட்டன. எனினும், மூன்று பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகளும், இரு வழிப் போராட்டமும் மென்மேலும் தீவிரமடைந்து வருகின்றது. தற்பொழுது, நேபாள மாவோயிசக் கட்சி தொழிற்சங்கம் மூன்றாக உடைந்து, மூன்று தனி அமைப்புகள் உருவாகியுள்ளன. தொழிற்சங்கப் பிரச்சினையில், கொள்கை சார்ந்த முரண்பாட்டை விடவும், நபர்கள், பிரிவுகள் சார்ந்த வேறுபாடே முதன்மையாக உள்ளது.

நேபாள மாவோயிசக் கட்சியில் நடைபெற்று வரும் உட்கட்சிப் போராட்டம் நமக்கு கவலையளிப்பதும், அதே வேளையில் கவனத்திற்குரியதுமாகும். அதே வேளையில், முதலாளித்துவப் பத்திரிக்கைளும், நேபாள புரட்சியின்  எதிரிகளும் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, பாபுராம் பட்டாராய் கட்சியை பிளவுபடுத்துவதாக வந்துள்ள அவதூறை கட்சியின் தலைவர் பிரசந்தா மறுத்துள்ளார். அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான, ‘சிவப்பு நட்சத்திரம்’ ஏட்டில், வெளியாகியுள்ள ஒரு பேட்டியில், கட்சியின் செயலாளர் சி.பி.கஜூரேல் உட்கட்சிப் போராட்டத்தை கையாள்வதற்கான புதிய முறைகளை குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

உட்கட்சிப் போராட்டத்தைக் கையாள்வதற்கென “பொதுவான சித்தாந்தரீதியிலான கருத்துக்கள், உதாரணமாக 21-ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியத்தின் குணாம்சங்கள், குறித்த விவாதங்களை பகிரங்கமாகவே நடத்தலாம்; ஒத்த கருத்துடைய (Like-minded என கஜுரேல் குறிப்பிடுகிறார்) தலைவர்களும், அணிகளும் தனியே சந்தித்துக் கொள்ளலாம்; இரு வழிப் போராட்டம் குறித்த சம அளவில் உள்ள தலைவர்கள் தனிப்பட்ட முறையில் கூட கூடிப் பேசலாம்” ஆகிய முடிவுகள் உட்பட்ட ஐந்து அம்சங்களைக் கொண்ட புதிய முறைகளை கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பிறிதொரு பேட்டியில், இது வெறுமனே கோஷ்டி சண்டையல்ல, மாறாக கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படத்தக்க சித்தாந்தப் போராட்டமே எனத் தெரிவித்துள்ளார்.  சித்தாந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் அடிப்படையிலேயே வேறுபாடுகள் நிலவுவதாகவும், அத்தகைய விவாதங்களின் மூலமே இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகளின் பின்னர் நிகழ்ந்த பிரச்சினைகள் குறித்து ஒத்த கருத்தை எட்டவும், அதனை மக்களிடம் தெரிவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐ.நே.க.க(மா)-வின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், இது போன்று பல உக்கிரமான உட்கட்சிப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. அதே வேளையில், இரு வழிப் போராட்டம் கட்சியின் ஒற்றுமையை சிதைத்து விடாமலிருக்கவும், ‘இரண்டு ஒன்றாவது’ எனும் அடிப்படையில், கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமை காண்பதற்கான வழிமுறைகளையும் அக்கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. மேலும், துணிச்சலான முடிவுகளை எடுப்பதிலும், அரசியல் தேக்கநிலையை உடைக்க புதிய முடிவுகளை எடுக்கவும், அதனை பரிசோதித்து அனுபவம் பெறுவதிலும் அக்கட்சி என்றும் தயங்கியதில்லை.

ஆனால், பகிரங்கமாக தொழிற்சங்கம் உடைபடுவதும், புதிய அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் கட்சித் தோழர்கள் யாருக்கு நெருக்கமானவர்கள் என செய்திகள் அடிபடுவதும், அதனை கட்சி அதிகாரபூர்வமாக மறுக்க முன்வராததும், தற்போதைய உட்கட்சிப் போராட்டம் எந்த வகையில் நன்மை பயப்பதாக இருக்கும் என சிந்திக்க வைக்கிறது. கஜுரேல் தெரிவிக்கும் புதிய வழிமுறைகள் உண்மையில் கட்சியின் வளர்ச்சிக்கும், உட்கட்சிப் போராட்டத்தில் ஐக்கியத்திற்கும் வழிவகுக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. நேபாள மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களும், அவர்களது எண்ணிறந்த தியாகங்களும், அதன் விளைவாக உருவான தீர்மானகரமான அரசியல் மாற்றமும் காப்பாற்றப்படும் என நம்புவோம்.

மிக மிகத் தாமதமாக ‘யுத்தம் செய்’ படம் பார்த்தேன். ‘வன்கொலைகளின் அழகியல்’, அது, இது எனப் பலரும் புகழ்ந்த படத்தில், எனக்கென்னவோ அப்படி எதுவும் தெரியவில்லை. நான் சாருவைப் போல தீடீரென்றோ, எப்பொழுதுமோ மிஷ்கினை வெறுக்கவில்லை. ஆனால், ‘யுத்தம் செய்’ செயற்கையாகவும், தட்டையாகவுமே இருந்தது. சேரனின் பொருந்தாத நடிப்பு, சொல்லப்படும் வன்முறையை படமாக்கிய விதம், நடுத்தர வர்க்க ஆவேசப் பூச்சு, மஞ்சள் சேலை சென்டிமெண்ட், அவரது cliched signatures… என கொஞ்சம் கூட மனதில் ஒட்டவில்லை.

அஞ்சாதே-யில் வன்முறைக் காட்சிகளில் இருந்த sensitivity முழுமையாக இத்திரைப்படத்தில் காணக் கிடைக்கவில்லை. ராம் கோபால் வர்மா என்று ஒருவர் இருந்தார். அவர் போன பாதையில் தான் மிஷ்கினும் பயணிக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.  துப்பாக்கியையும், குரோசாவாவையும் தாண்டாத வரை மிஷ்கினுக்கு முட்டுச் சந்து மட்டுமே காத்திருக்கிறது.

லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!

குறிப்பு: கடந்த ஜனவரி 17-ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் காங்கோவிலுள்ள கடாங்கா மாகாணத்தில், கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரைப் படுகொலை செய்த புனிதக் கூட்டணி, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, பெல்ஜிய அரசு, காங்கோவை சூறையாடிய சுரங்க நிறுவனங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற கூலிப்படைகள் என நீள்கிறது. ஐம்பதாண்டுகள் கழிந்தும் மாறாத வடுக்களினால், ஆப்பிரிக்காவில் லுமூம்பாவை நினைவு கூறுவோரின் நம்பிக்கை தொலைத்த  விழிகளில், இழப்பின் துயரத்தையும், ஆத்திரத்தையும் நாம் இன்றும் காணலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு மைக் ஈலி என்பவர் எழுதியதும், தற்பொழுது கசாமா எனும் இணைய தளத்தில் அவரால் திருத்தி எழுதப்பட்டு வெளியிடப்பட்டதுமான கட்டுரை கீழே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பதிவை PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்யவும், அச்சிடவும்: http://bit.ly/hJW1IZ

பத்ரீஸ் லுமும்பா: காங்கோ எழுச்சியும், படுகொலையும்!

மைக் ஈலி

1960, ஜூலை 30- ஆம் நாள், உலகம் முழுவதும் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி வந்த கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தரும் நாளாகவிருந்தது. ‘பெல்ஜியன் காங்கோவின்’ மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுத்த பெல்ஜிய காலனியாதிக்கவாதிகள், தாது வளம் நிறைந்த மண்ணை விட்டு வெளியேறவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கவுமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். காங்கோ எனும் குடியரசு மலர்நதது, அதன் தலைவர்களில் ஒருவர்தான்  பத்ரீஸ் லுமும்பா! காலனிய எதிர்ப்பு கனன்று கொண்டிருந்த, துடிப்பு மிக்க இளம் அரசியல்வாதி.

லியோபோல்ட்வில்லே-யில்(இன்றைய கின்ஷாசா) நடைபெற்ற விழாவில், பெல்ஜியாவின் அரசன் ஒன்றாம் பதோயின் நேரடியாக கலந்து கொண்டு காங்கோ சுதந்திரம் பெற்று விட்டதை அறிவிக்க வந்திருந்தான். அவ்விழாவில், காலனியாதிக்கவாதிகளும், அடிமைப்பட்டவர்களும் தமக்குள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, முன்பு போலவே எதுவும் மாறாமல் தொடரும் நோக்கத்துடன், பரஸ்பரம் ஒருவரையொருவர் புகழ்ந்து தள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெல்ஜிய அரசர் திமிரோடு தமது உரையில் கூறினார்: “கனவான்களே, நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுந்தவர்கள் என நிரூபிப்பது இனி உங்கள் பொறுப்பு! “

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் லுமும்பா மேடைக்கு வந்து பேசத் துவங்கியவுடன்தான், அரங்கில் அமர்ந்திருந்த காங்கோ மக்கள் எழுச்சியும், உற்சாகமும் கொள்ளத் துவங்கினர். அவரது ஆற்றொழுக்கான உரை வானொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. பெல்ஜியர்களின் கீழ் மக்கள் அனுபவித்த இன்னல்களையும், எதிர்காலத்திற்கான தமது எண்ணங்களையும் லுமும்பா எடுத்துரைத்தார். பெல்ஜிய அரசர் பேயறைந்தது போல உறைந்து போனார்.

லுமும்பா கூறினார்:

“எண்பதாண்டுகளாக, காலனிய ஆதிக்கத்தின் கீழ், எமது தலைவிதி இப்படித்தான் இருந்தது. எமது காயங்கள் காலங் கடந்தவையல்ல. அவை தாங்கொணாத வலி கொண்டவை. எனவே, இன்னமும் எங்களது மனங்களிலிருந்து அவை அகன்று விடவில்லை. மிகக் குறைவான கூலிக்கு முதுகு தேய நாங்கள் வேலை செய்திருக்கிறோம். ஒருபோதும் நாங்கள் வயிறார உண்ண முடிந்ததில்லை. பட்டினிச் சாவுகளை தடுக்க இயன்றதில்லை. நாங்கள் நல்ல உடைகளை அறிந்ததில்லை. வசிக்கத்தக்க வீடுகளில் வசித்ததில்லை. எமது அருமைக் குழந்தைகளை நேசித்து வளர்க்க முடிந்ததில்லை. காலையும், மதியமும், மாலையும், இரவும் என ஒவ்வொரு நாளும் நாங்கள் பீதியூட்டப்பட்டோம், இழிவுபடுத்தப்பட்டோம், கடுமையாகத் தாக்கி ஒடுக்கப்பட்டோம்,  ஏனெனில் நாங்கள் கறுப்பர்கள்…

வல்லான் வகுத்ததே நியாயம் என  அங்கீகரிக்கும் சட்டங்களின் மூலம், சட்டப்பூர்வமான வழிகளில் எமது நிலங்கள் எமது கண்களுக்கு முன்பாக ஆக்கிரமிக்கப்பட்டன. சட்டம் வெள்ளையனுக்கு இணக்கமாகவும், கறுப்பனுக்கு குரூரமானதாகவும், மனிதத் தன்மையற்றதாகவும் விளங்கும், அது ஒருபோதும் சமமாக இராது என்பதைக் கண்கூடாகக் கண்டறிந்தோம்.

தமது அரசியல் அல்லது மதக் கருத்துக்களுக்காக கண்டனம் செய்யப்பட்டு, சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்க நேர்ந்தவர்களை நாங்கள் அறிவோம். அவர்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டவர்கள்; மரணத்தை விடவும் கொடியது அவர்களது நிலை. நகரங்களில் வெள்ளையர்கள் தமது மாட மாளிகைகளில் வீற்றிருக்க, கறுப்பர்களாகிய நாங்கள் இடிபாடுகளில் வசித்து வந்திருக்கிறோம். நாங்கள் திரை அரங்குகளிலோ, உணவு விடுதிகளிலோ, ஐரோப்பியர்களின் கடைகளிலோ ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. வெள்ளையர்கள் தமது சொகுசு கேபின்களில் பயணம் செய்ய, அவர்களது காலடிகளில், ரயிலின் வாசல்களில் நின்று நாங்கள் பயணம் செய்திருக்கிறோம். இந்த அடக்குமுறையும், சுரண்டலும் உருக்கொண்ட அரசை எதிர்த்து நின்ற, எமது எத்தனையோ சகோதரர்கள் வெஞ்சிறைகளில் தள்ளப்பட்டதை,  உருத்தெரியாமல் கொன்றொழிக்கப்பட்டதை நாங்கள் எவ்வாறு மறக்க முடியும்?

சகோதரர்களே, இவையனைத்தையும் நாங்கள் சகிக்திருக்கிறோம். ஆனால், உங்களது ஓட்டுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிதிகள், இன்று நமது நாட்டை வழிநடத்தும் பொறுப்பை எங்களுக்கு அளித்திருக்கிறார்கள்.  காலனிய ஒடுக்குமுறையால், மனதாலும், உடலாலும் நொறுக்கப்பட்ட நாங்கள் உங்களுக்கு உரக்கவும், உறுதிபடவும் கூற விரும்புகிறோம். நான் கூறிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டன. காங்கோ குடியரசு அறிவிக்கப்பட்டு விட்டது, நமது நாடு தற்பொழுது அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில் உள்ளது.”

கடந்த காலம் குறித்த லுமும்பாவின் சொற்கள் உண்மையே. ஆனால், எதிர்காலம் குறித்த சொற்கள் அவரது உண்மையாகவில்லை.

உண்மையில், நாடு “அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில்” இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமான சுதந்திரம் என்ற நாடகத்தின் பின்னே, பெல்ஜியத்தின் இராணுவ அதிகாரிகள் காங்கோவின் இராணுவத்தையும், காவல்துறையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சுரங்க நிறுவனங்கள் நாட்டின் வளங்களையும், ஊழல் அரசியல்வாதிகளையும் தமது கரங்களில் வைத்திருந்தனர். அமெரிக்காவின் சி.ஐ.ஏ, பெல்ஜிய உளவுத்துறை மற்றும் இதர ஏகாதிபத்திய நாடுகளது உளவுத் துறை நிறுவனங்களின் ஏஜெண்டுகள், ஏகாதிபத்திய விசுவாசிகளின் கரங்களில் அதிகாரம் உறுதியோடும், நிரந்தரமாகவும் நிலைத்திருப்பதற்கான சதிவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.

பதவியேற்ற இரு நூறு நாட்களில் பத்ரீஸ் லுமும்பா ஏகாதிபத்திய ஏஜெண்டுகளால் படுகொலை செய்யப்பட்டார்.

காங்கோவில் நடந்த நிகழ்வுகள் உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்களின் இதயத்தை உலுக்குவதாக இருந்தன. தேச விடுதலையின் அடிப்படையிலான புதிய சமுதாயம் எனும் வெற்றியை சாதிப்பதற்கு, மக்கள் படையும், புரட்சிகரப் பாதையும் இன்றியமையாதவை எனும் உண்மையை, கோடிக்கணக்கான மக்களுக்கு  காங்கோவில் நடைபெற்ற நிகழ்வுகள் உணர்த்தின.

இன்று, 40 வருடங்களுக்குப் பிறகும், ஆப்பிரிக்க நாடுகள் இன்னமும் சுதந்திரமான நாடுகள் என்றே அறியப்படுகின்றன. ஆனால், அந்நாடுகளின் மக்கள் உண்மையான விடுதலைக்காக காத்திருக்கின்றனர். காங்கோ போரிடும் தரப்புகளுக்கு இடையே துண்டாடப்பட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு தரப்பையும் தூண்டி மோத விட்டு, தமது நிழல் யுத்தத்தை ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்துகின்றன.

லியோபோல்ட்டின் சொத்து

மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து பாய்ந்தோடும் காங்கோ நதி, மழைக்காடுகளையும், சவன்னா (வெப்பப் புல்வெளிகள்) வெளிகளையும், 200 வகைப்பட்ட மக்களது நிலங்களையும் கடந்து, ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி அட்லாண்டிக் பெருங்கடலைச் சென்றடைகிறது.

அதன் கடற்கரையோரங்களில் நடைபெற்ற 300 வருட அடிமை வர்த்தகத்தைத் தொடர்ந்து, 1885-ல், பெல்ஜிய அரசன் இரண்டாம் லியோபோல்ட் காங்கோ நதிநீர்ப் பெருநிலங்களை தனது தனிப்பட்ட சொத்தாக மாற்றிக் கொண்டான். 1885-ல் நடைபெற்ற புகழ்பெற்ற பெல்ஜிய மாநாடு அரசனின் அபகரிப்பை அங்கீகரித்தது. அம்மாநாட்டில், ஐரோப்பிய அரசுகள் ஆப்பிரிக்க மக்களை சுரண்டுவதற்கான தமது உரிமைகளை பரஸ்பரம் அங்கீகரித்துக் கொண்டன.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்தால் கிடைக்கத்தக்க அளவு பெரிய நிலப்பகுதியை பெல்ஜிய அரசன் பெற்றுக் கொண்டான். அந்த நிலப்பகுதி பெல்ஜியத்தின் மொத்தப் பரப்பை விடவும் 80 மடங்குப் பெரியதாகும். தனது நிலப்பகுதிகளுக்கு ‘சுதந்திரக் காங்கோ’ என்று பெயரிட்ட அரசன், ஆயுதப் படைச் சாவடிகளின் வலைப்பின்னலையும், அடிமை உழைப்பு முகாம்களையும் கட்டியமைத்தான். முதலாளித்துவமும், காலனியாதிக்கவாதமும்தான் எத்தனை முறை ‘சுதந்திரம்’ என்ற சொல்லை வக்கிரமான முறையில் திரித்துப் புரட்டியிருக்கின்றன?

பெல்ஜிய அரசனின் அடிமை உழைப்பு முகாம்களில் ஆப்பிரிக்க மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறைகள்தான், வரலாற்றில் இதுகாறும் பதிவு செய்யப்பட்ட சித்திரவதைகளிலேயே மிகக் கொடூரமானதும், இதயத்தை நடுங்கச் செய்வதுமாகும். இத்தகைய முகாம்களில் அடிமைகளின் கடும் உழைப்பில் விளைந்த ரப்பர், வெட்டு மரங்கள், பாமாயில் ஆகியன பெல்ஜிய மற்றும் அமெரிக்க முதலாளிகளை பணத்தில் கொழிக்க வைத்தன. இச்சுரண்டலில், குக்கென்ஹெய்ம், மார்கன் மற்றும் ராக்ஃபெல்லர் முதலான அமெரிக்க முதலாளிகள் முக்கிய பங்கு வகித்தனர். இத்தகைய கொலைகார நடவடிக்கைகளின் விளைவாக, இருபது வருடங்களில் காங்கோவின் மக்கள்தொகை இரண்டரைக் கோடியிலிருந்து ஒரு கோடியாகக் குறைந்தது.

1908-ஆம் ஆண்டு, காங்கோ மக்களின் கலகங்களைத் தொடர்ந்து, பெல்ஜிய ஆளும் வர்க்கம் தனது விலையுயர்ந்த காலனியின் மீதான ஆட்சி முறையை மாற்றியமைத்தது.  நேரடி நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொண்டு, நாட்டுக்கு ‘பெல்ஜியன் காங்கோ’ என பெயர் சூட்டியது. இதனைத் தொடர்ந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ‘பெல்ஜியன் காங்கோவில்’ நடந்தேறின. ஏனெனில், காங்கோவின் தென்கோடியில் தனித்திருந்த கடாங்கா மாகாணத்திலுள்ள தாமிர வயல்களையும், கசாய் மாகாணத்திலுள்ள வைர வயல்களையும் காலனியாதிக்கவாதிகள் சுரண்டத் துவங்கினர். இரண்டாம் உலகப் போர்(1939-1945) காலகட்டத்தில், ஏகாதிபத்தியப் போர் நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்களுக்கும், உலகின் மொத்த கோபால்ட்டில் 65 சதவிகிதத்திற்கும், ரப்பர், டைட்டானியம் உள்ளிட்ட பொருட்களுக்கும் காங்கோ தான் மூலாதாரமாக விளங்கியது. இம்மாற்றங்களின் விளைவாக, நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மை வகித்த கோடிக்கணக்கான விவசாயிகளோடு, ஒரு நவீனப் பாட்டாளி வர்க்கமும் உருவாகி வளரத் துவங்கியது. 1941-ஆம் ஆண்டு வாக்கில், போர்க்கால உற்பத்தியின் விளைவாக, உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தொட்டது. (இத்தொகை அன்றைய ஆப்பிரிக்கக் கண்டத்தில் இரண்டாம் பெரிய பாட்டாளி வர்க்க மக்கள் தொகையாகும்.) அடுத்த 15 ஆண்டுகளில், லியோபோல்ட்வில்லே நகரத்தின் மக்கள் தொகை பத்து மடங்கு உயர்ந்து, 3 இலட்சம் எண்ணிக்கையை எட்டியது.

சுழன்றடித்த போராட்டப் புயல்

இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகக் காலனிய அமைப்பு பலமாக ஆட்டம் கண்டது. தனது ஆப்பிரிக்க காலனிகளிலிருந்து நாஜி ஜெர்மனி துண்டிக்கப்பட்டது. பெல்ஜியமும், பிரான்சும் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஐரோப்பாவினுள் நடைபெற்ற யுத்தங்களில் பிரிட்டன் ஆழ்ந்து கிடந்தது. மொத்தத்தில், மரபார்ந்த காலனிய சக்திகள் போரின் இறுதியில் மிகவும் பலவீனமடைந்தன.

இதனிடையே, சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி மற்றும் மாவோ தலைமையில், சீன மக்கள் தமது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார்கள். ஜப்பானியர்களிடமிருந்து தமது நாட்டை விடுவித்து, அமெரிக்க ஆதரவு பெற்ற கோமிண்டாங்கை முறியடித்து, அமெரிக்காவை கொரியாவுடன் தடுத்து நிறுத்தினர். இதற்கு முன்னர் ஒருபோதும் அடிமைப்பட்ட மக்கள் இத்தகைய முறையில் ஏகாதிபத்திய சக்திகளை தோற்கடித்ததில்லை. உலகம் முழுவதும் குறிப்பாக வியட்னாம், அல்ஜீரியா, கியூபா முதலான பல்வேறு நாடுகளில் ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்த போராட்டங்கள் மாபெரும் அலைகளாக வெடித்தெழுந்தன.

1963-ல் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி எழுதியது:

“இரண்டாம் உலகப் போர் தொடங்கியதிலிருந்து ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒரு மாபெரும் புரட்சிப் புயல் சுழன்றடிக்கிறது. 50-க்கும் மேற்பட்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது… பற்றியெறியும் தேசிய விடுதலை எனும் காட்டுத் தீயை ஏகாதிபத்தியங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்களது பழைய காலனித்துவ அமைப்பு வெகுவேகமாக நொறுங்கி வருகிறது. சில காலனி நாடுகளிலும், சார்பு நாடுகளிலும் ஏகாதிபத்திய ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் ஏகாதிபத்தியம் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. “

காங்கோவிலும் பெல்ஜிய ஆட்சிக்கு எதிராக, கடுமையான அடக்குமுறையையும், சிக்கலான சூழல்களையும் எதிர்கொண்டு மக்கள் போர்க்குணத்தோடு அணிதிரண்டு போராடினர். பெல்ஜியாவிலிருந்து குடியேறியவர்களிடம் அனைத்து அதிகாரங்களும் இருந்தன. காவல்துறையையும், படைகளையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சுரங்க நிர்வாகத்திலும், அரசு நிர்வாகத்திலும் அவர்களே வீற்றிருந்தனர். சில விதிவிலக்குகளை தவிர்த்து, காங்கோ மக்கள் யாரும் பள்ளிப் படிப்பைக் கூட தாண்ட முடிந்ததில்லை. 1950-வாக்கில்,  வெறுமனே 100 காங்கோ மக்கள் மட்டுமே கல்லூரிப் படிப்பை முடித்திருந்தனர். பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் தொடர்ந்து தமது பழைய பிரித்தாளும் கொள்கையின் வழிமுறைகளைக் கொண்டு, மக்களுக்கிடையிலும், பிரதேசங்களுக்கிடையிலும் தொடர்ந்து முரண்பாடுகளைத் தூண்டி விட்டனர்.

எதிர்காலத்தை கட்டியம் கூறிய நிகழ்வுகள்

மக்களிடையே நிலவிய இன வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றுபட்ட சுதந்திரக் காங்கோவிற்கான போராட்டத்தை முன்வைத்த தேசிய காங்கோலிய இயக்கத்தை (தே.கா.இ) காலனியவாதிகளின் அரசு கடுமையாக ஒடுக்கியது. தே.கா.இ-யின் முன்ணணித் தலைவரான லுமும்பாவும், அவரது சக போராளிகளும் சட்ட விரோதக் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அதே வேளையில், 1959-ல், பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் விரைவாக காங்கோவிற்கு பெயரளவு சுதந்திரம் அளிக்க முடிவு செய்தனர். தமது பழைய வழிமுறைகள் நீண்ட காலம் நீடிக்க இயலாது என்பதை அவர்கள் கண்டு கொண்டனர். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மேற்கு ஆப்பிரிக்காவிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிலும் செய்தததைப் போல, மக்கள் இயக்கம் தமது கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்வதற்குள், தாம் தேர்வு செய்த ஒரு ‘சுதந்திர’ அரசை உருவாக்க விரும்பினர். புதிய காங்கோ அரசானது, பலவீனமானதாகவும், பிற்போக்கான பெல்ஜிய ஆதரவு சக்திகளால் தலைமை தாங்கப்படுவதாகவும், பெல்ஜிய அதிகார வர்க்கத்தையும், பெல்ஜிய ராணுவ அதிகாரிகளையும், பெல்ஜிய நிதியையும் சார்ந்து நிற்பதாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர்.

உண்மையான அதிகாரத்தையும், பொருளாதார வாழ்வையும் அன்னிய ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு பெயரளவு போலி சுதந்திரத்தை வழங்கும் நவ காலனியத்தின் மூலம் காலனியத்தின் முகத்தை மாற்றியமைப்பதுவே அவர்களின் திட்டமாக இருந்தது. சின்னஞ்சிறிய பெல்ஜிய ஏகாதிபத்தியம், தனது இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே பெரிதும் சார்ந்திருந்தது. ஏனெனில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக யுத்த முடிவில், பலம் வாய்ந்த மேலாதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்தியமாக உருவாகியிருந்தது. காங்கோவில் தனக்கென பிரத்தியேக திட்டங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருந்தது.

மக்களை அணிதிரட்டி சுதந்திரத்திற்கான வாக்குறுதியை நிறைவேற்றுமாறு, பெல்ஜியத்தை நிர்ப்பந்திப்பதே தே.கா.இ-யின் வழிமுறையாக இருந்தது. பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட தேர்தல்களில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம், நிலவும் காலனியக் கட்டமைப்பை, காவல் துறையை, ஆயுதப் படைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தே.கா.இ எண்ணியது. அதிகாரத்தை அடைந்தவுடன், பெல்ஜிய ஆதிக்கத்தை காங்கோவிலிருந்து படிப்படியாக முடிவுக்கு கொண்டு வரலாம். அதன் பின்னர், காங்கோவின் வளமான இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், உலக நாடுகளின் வரிசையில் சரிசமமான தமது பங்கை பெறவும் இயலும் என தே.கா.இ நம்பியது.

தே.கா.இ ஒரு அமைதியான ஆட்சி மாற்றத்தையே எதிர்நோக்கியது. காலனியவாதிகளின் படைகளை எதிர்கொள்ளத்தக்க தனக்கான ஆயுதப் படைகளை உருவாக்க தே.கா.இ முயற்சிகள் எடுக்கவில்லை. 1960-ன் துவக்கப் பகுதியில் லுமும்பா கூறினார். “கடந்த காலத்தில் ஆப்பிரிக்காவில் நிறைய தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. எனினும், ஒரு புதிய பலம் வாய்ந்த அணியை உருவாக்கும் பொருட்டு உள்ள சக்திகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம். இம்முயற்சி தோல்வியுறுவதென்பது, மேற்கின் தவறான செயல்களினாலேயே நடந்தேறும்.”

தே.கா.இ-யின் அதிகரிக்கும் பலத்தைக் கண்டு அஞ்சிய பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள், சுதந்திரம் வழங்குவதற்கான தமது நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்தினர். 1960-ஆம் ஆண்டு, ஜூலை 30-ஆம் நாள், புதிய சுதந்திரமான காங்கோ அரசு பொறுப்பேற்றது. தேர்தலில் அதிக வாக்கு எண்ணிக்கைகள் பெற்ற தே.கா.இ ஆட்சியமைத்தது. லுமும்பா நாட்டின் பிரதமராகி, ஆட்சிப் பொறுப்பில் இரண்டாம் இடத்தை வகித்தார்.

கொடூரமான நவ காலனிய சூழ்ச்சி

மிக விரைவிலேயே, பத்ரீஸ் லுமும்பாவும், தே.கா.இ-யும் அங்கம் வகிக்கும் எந்தவொரு கூட்டணி ஆட்சியும் தமது நலன்களுக்கு அபாயகரமானது என ஏகாதிபத்தியவாதிகள் முடிவு செய்தனர். நாட்டில் பிரிவினைகளை உருவாக்கி குழப்பத்தை உண்டாக்கவும், லுமும்பாவை நீக்கவும், தனிமைப்படுத்தி இயங்க விடாமல் செய்யவுமான சக்திகளை அவர்கள் அணிதிரட்டினர். அத்தகைய சக்திகள் நிறையவே இருந்தன. லுமும்பாவிற்கு மக்களிடம் ஆதரவு இருந்தது. ஆனால், அரசு அதிகாரத்தின் முக்கிய கருவியும், நிதி மற்றும் சுரங்க நிர்வாகமும் காலனியவாதிகள் விட்டுச் சென்ற நிலையிலேயே நீடித்தன. பெல்ஜிய அதிகாரிகள் நாட்டை விட்டு அகன்ற பொழுது, கோப்புகளையும், ஆவணங்களையும், ஏன் தொலைபேசிகளையும் கூட கையோடு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் லுமும்பா அரசுக்கு திட்டமிட்டு நெருக்கடிகளை உண்டாக்கினர்.

காங்கோ தேசிய இராணுவம் என இராணுவத்தின் பெயர் மாற்றப்பட்டிருந்த போதிலும், இராணுவம் இன்னமும் காலனியவாதிகளின் இராணுவமாகவே இருந்தது. இராணுவத்தில் மிகப் பெரிய கலகம் வெடித்தது. வெள்ளை அதிகாரிகள் தம்மை இழிவாக நடத்துவதை கறுப்பர்களான படைவீரர்கள் ஏற்க மறுத்தனர். வெள்ளை அதிகாரிகளோ புதிய தேசிய அரசின் ஆணைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள்.

அன்னிய உளவாளிகள், குறிப்பாக அமெரிக்க சி.ஐ.ஏ, நாட்டை சீர்குலைக்கும் வேலைகளில் செயல்பட்டது. அரசிலும், இராணுவத்திலும் தனக்கான ஏஜெண்டுகளை வென்றெடுத்தது. அத்தகைய நபர்களில் ஒருவன் தான் ஜோசப் டிசியரே மொபுடு. காலனிய காலத்து காவல்துறையில் காவலாளியாக இருந்த மொபுடுவை, புதிய தேசிய் அரசு இராணுவத்தின் தலைவனாக அமர்த்தியிருந்தது.

இதனிடையே, சுரங்க நிறுவனங்கள், தமது நம்பகமான சக்திகளின் கைகளில், சுரங்க வளம் நிறைந்த பகுதிகளின் அரசியல் அதிகாரம்  நீடித்திருப்பதை உறுதி செய்தன. அவர்களது உள்ளூர் கைப்பொம்மையான மோயீஸ் ஷோம்பே என்பவன், தொலைதூர கடாங்கா மாகாணம் காங்கோவிடமிருந்து விடுதலையடைந்து விட்டதாக, லுமும்பா பதவிக்கு வந்த ஒரு மாதத்திலேயே அறிவித்தான்.  இப்பிரிவினைக்கு பெல்ஜிய அரசு அளித்த ரகசிய ஆதரவு தற்பொழுது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சீர்குலைவை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜிய அரசு அதிகமான துருப்புகளை காங்கோவிற்கு அனுப்பியது. லுமும்பா அரசின் கண்டனங்களை பெல்ஜியம் கண்டு கொள்ளவில்லை. காலனிய அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கான முயற்சிகளை எதிர்த்து, மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் அலை அலையாக வெடித்தெழுந்தன.

அன்னிய ஆக்கிரமிப்பு, உள்நாட்டுப் போர், அரசு நிர்வாகம் நிலைகுலைதல் என ஒன்றிணைந்த ஆபத்துக்களை லுமும்பா எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், இவற்றுக்கெதிராகப் போராடுவதற்குத் தேவையான அமைப்பாக்கப்பட்ட சக்திகள் லுமும்பாவிடம் குறைவாகவே இருந்ததன. வேறு வழியின்றி, ஒன்றன்பின் ஒன்றாக அன்னிய சக்திகளிடம் லுமும்பா உதவி நாடினார். முதலில் அவர் ஐ.நாவை நாடினார். ஆனால், அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கு, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தான் பதில் அளித்தார்களேயன்றி தனது அரசுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்பதை கண்டு கொண்டார்.

பின்னர், லுமும்பா சோவியத் ஒன்றியத்தை நாடினார். மேற்குலக ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராக சோவியத்தை பயன்படுத்த இயலும் என எண்ணினார்.

அக்காலகட்டத்தில், சோவியத் யூனியன் இன்னமும் பரவலாக ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோலிச சக்தியாகவே அறியப்பட்டு வந்தது. ஆனால், சோவியத் ஒன்றியத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன. அங்கே நிகிதா குருச்சேவின் தலைமையில் முதலாளித்துவ மீட்சி நடைபெற்றிருந்தது. ஆனால், இம்மாற்றத்தை அன்றைய புரட்சியாளர்கள் பரவலாக அறிந்திருக்கவில்லை. காங்கோ போன்ற நாடுகளிடம் புதிய சோவியத் ஆளும் வர்க்கம் தனக்கான நவ காலனிய உறவுகளை மேற்கொள்ளவே எண்ணியது. ‘ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியை மேற்கொள்ளக் கூடாது, இல்லையேல் அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையில் அணு ஆயுத உலகப் போர் மூண்டு விடும்’ என சோவியத் திரிபுவாதிகள் வாதிட்டது. மாறாக, காலனிய நாட்டு மக்கள் சோவியத் ‘ஆலோசகர்களுக்கும்’, இராணுவ வல்லுனர்களுக்கும் தமது கதவுகளை திறந்து வைக்க வேண்டுமென்றும், சோவியத் ஆளுமையின் கீழ் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்றும் கூறியது. 1960 செப்டம்பரில், சோவியத் ஆலோசகர்களும், இராணுவ வல்லுனர்களும் காங்கோவில் வந்திறங்கினர். அமெரிக்க தூதர் பிரதமர் லுமும்பாவை ‘லுமும்பாவிட்ச்’ (ரஷ்யப் பெயர் போல) என அழைக்கத் துவங்கினார்.

அனைத்து வகையான பிற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளும் காங்கோவைக் கைப்பற்ற போராடிக் கொண்டிருந்தன. காங்கோ மக்களின் எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டிருந்த லுமும்பா, தான் மென்மேலும் தனிமைப்படுவதையும், தனது அதிகாரம் பலவீனப்படுவதையும் உணர்ந்தார்.

லுமும்பாவை கொலை செய்ய ஆணை!

“விளையாடுபவர்கள் விரைவாகவும், இரகசியமாகவும் விளையாடுவார்கள். ஒவ்வொரு வளைவும் நதிகளையும், காடுகளையும், கண்டங்களையும், பெருங்கடல்களையும் தாண்டிப் பாயும். ஒவ்வொரு நகர்த்தலும் கண்ணாடிக்கு பின்னான அன்னியக் கண்களுக்கும், ஒரு காலத்தில் மாபெரும் மரங்களாக இருந்து இன்று வேரறுந்து நிற்பவைகளுக்கும் மட்டுமே புலப்படும்… 1960, ஆகஸ்ட் மாதத்தின் ஒரு நாளன்று, சி.ஐ.ஏ-வின் பொறுப்பிலிருந்த அலென் டல்ஸ், காங்கோ சி.ஐ.ஏ நிலையத் தலைமை அதிகாரிக்கு ஒரு தந்தி அனுப்பினார். அத்தந்தியில் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் காங்கோ அரசை மாற்றியமைக்குமாறு தெரிவித்தார். நிலையத் தலைமை அதிகாரி லாரன்ஸ் டெவ்லின் தைரியமாகவும் அதே வேளையில் இரகசியமாகவும் ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டார். ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சரியானதே. அதற்கான பணமும் கூட படைவீரர்களுக்கு வந்து சேரும். ஆனால் கொலை செய்வது அதனை விடவும் அதிகம் செலவு இல்லாத வேலை…”

பார்பரா கிங்சால்வர், நச்சுமரத்தின் வேதாகமம் எனும் நூலிலிருந்து…

“லுமும்பா தொடர்ந்து உயர் பதவி வகிப்பாரானால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதே, இங்கு உயர் மட்டங்களின் உறுதியான முடிவாக உள்ளது. “

அலென் டல்ஸ், சி.ஐ.ஏ இயக்குனர், 1960 குறிப்பாணையிலிருந்து…

“எந்தவொரு அடக்குமுறையும், சித்திரவதையும் என்னைப் பணிய வைக்க முடிந்ததில்லை. ஏனெனில், அடிமைப்பட்டும், தலை குனிந்தும் எனது புனிதமான கொள்கைகளுக்கு துரோகம் செய்தும் வாழ்வதை விட, எனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைக் கைவிடாமலும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமலும் மரிக்கவே நான் விரும்புகிறேன். எனது கூற்றை வரலாறு ஒரு நாள் சரியென நிரூபிக்கும். அந்த வரலாறு பிரஸ்ஸல்சும், பாரிசும், வாஷிங்டனும், ஐ.நாவும் கற்பிக்கும் வரலாறாக இராது. மாறாக காலனியாதிக்கத்திலிருந்தும், அதன் கைப்பொம்மைகளிலிருந்து விடுபட்ட ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் வரலாறாக இருக்கும்.”

1961 ஜனவரியில் தாம் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு, லுமும்பா தமது துணைவி பாலினுக்கு எழுதிய கடிதத்திலிருந்து…

1960 செப்டம்பர் இறுதியில் சி.ஐ.ஏ ஏஜெண்டான கர்னல் மொபுடு தலைநகரத்தில் அரசியல் அமைப்புகளைத் தடை செய்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு நிகரான நடவடிக்கையில் ஈடுபட்டான். அடுத்த சில நாட்களிலேயே, அக்டோபர் 10-ஆம் தேதியன்று, ஐ.நா மற்றும் காங்கோ தேசிய இராணுவப் படைகளால் லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். நவம்பர் 27-ஆம் தேதியன்று வீட்டுக் காவலிலிருந்து தப்பிய லுமும்பா, தனது மக்கள் செல்வாக்கின் மையக் கேந்திரமான ஸ்டான்லிவில்லே நோக்கி செல்ல முயன்றார். ஆனால், டிசம்பர் 2-ஆம் தேதியன்று சங்குரு நதிக்கரையில் வைத்து மொபுடுவின் ஆட்களால் மீண்டும் கைது செய்யப்பட்டார். லுமும்பா விசயத்தில் தலையிட வேண்டாம் என நியூயார்க்கிலிருந்து வந்த கண்டிப்பான ஆணையையொட்டி, ஐ.நா படைகள் வெறுமனே வேடிக்கை பார்த்து நின்றன.

முதலில் லியோபோல்ட்வில்லே-வுக்கு கொண்டு செல்லப்பட்ட லுமும்பா, அங்கே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் முன் நிறுத்தப்பட்டார். பின்னர், அவரது எதிரிக் குழுக்கள் ஒவ்வொன்றிடமாக கைமாற்றப்பட்டார். ஒரு மாதம் முழுதும் ஒவ்வொரு எதிரிக் குழுவும் லுமும்பாவை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்தன. இறுதியாக கடாங்கா மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட லுமும்பா, அங்குள்ள பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

1961, ஜனவரி 18-ஆம் தேதி அதிகாலையில், லுமும்பா சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அனைத்து சித்திரவதைகளையும் உறுதியோடு எதிர்கொண்டதாகவும், தனது மரண நொடியிலும் கூட கொலையாளிகளை தைரியமாக எதிர்கொண்டதாகவும் பிற்காலத்தில் அவரது கொலையாளிகள் ஒப்புக் கொண்டனர்.

சி.ஐ.ஏ-வின் பொய்கள்

துவக்கத்தில்,லுமும்பா “சினமுற்ற கிராமவாசிகளால்” கொல்லப்பட்டதாக பெல்ஜிய, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அறிவித்தனர். அடுத்த சில பத்தாண்டுகளுக்குப் பிறகும் கூட, லுமும்பா “அவரது காங்கோ எதிரிகளால்” படுகொலை செய்யப்பட்டதாகவே கூறி வந்தனர். இப்பொய்கள் அனைத்தும், ஆப்பிரிக்க மக்கள் தம்மையே ஆண்டு கொள்ளும் திறனற்றவர்கள் எனும் கருத்தின் அடிப்படையில், தமது இனவெறியையும், நவ காலனியக் கொள்கைகளையையும் நியாயப்படுத்தும் நோக்கத்துடனேயே, கொலையாளிகளால் கூறப்பட்டன.

உண்மையில், லுமும்பா அரசை ஆட்டுவித்த பிரச்சினைகள் அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் சீர்குலைவு வேலைகளின் காரணமாகவே உருவாகியது.

சி.ஐ.ஏ ஏஜெண்ட் ஃபிராங்க் கார்லூசி

கடந்த சில வருடங்களில், படுகொலையை நிறைவேற்றிய பெல்ஜிய-அமெரிக்க கூட்டு நடவடிக்கை குறித்து நிறைய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. காங்கோ விடுதலையடைந்து இரண்டே மாதங்களில், அதாவது 1960 ஆகஸ்ட் மாதத்தில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் தாமே நேரடியாக, லுமும்பாவை படுகொலை செய்வதற்கான ஆணையை பிறப்பித்தார் எனத் தற்பொழுது தெரிய வந்துள்ளது. இந்த ஆணையை நிறைவேற்ற, பின்னாளில் அமெரிக்க அதிபர் ரீகன் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை செயலாளராகப் பணியாற்றிய ஃபிராங்க் கார்லூசி உள்ளிட்ட அமெரிக்க ஏஜெண்டுகள் களமிறக்கப்பட்டனர்.

லுமும்பா வீட்டுக்க் காவலில் வைக்கப்பட்ட சில நாட்களில், அக்டோபர் 6-ஆம் தேதியன்று, ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான பெல்ஜிய அமைச்சர் லிண்டன், லுமும்பாவை “தீர்மானகரமாக கொன்றொழித்து விடுமாறு” கடாங்கா தலைநகருக்கு தந்தி அனுப்பினார். டிசம்பர் 2-ஆம் நாள் கைது செய்யப்பட்டதிலிருந்து, லுமும்பா ஏகாதிபத்திய ஏஜெண்டுகளின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருந்தார். பெல்ஜிய துருப்புகளால் காவல் காக்கப்பட்ட வீட்டில் வைத்துதான் சித்திரவதை செய்யப்பட்டார்.

1961, ஜனவரி 15-ஆம் நாள், லுமும்பாவை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு, ஏகாதிபத்தியக் கைப்பொம்மையான கடாங்காவின் ஷோம்பே அரசுக்கு, அமைச்சர் லிண்டன் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். இரண்டு நாட்களில் அவரது ஆணை நிறைவேற்றப்பட்டது. பெல்ஜிய டிசி-4 விமானத்தில் கடாங்காவிற்கு லுமும்பா அழைத்து செல்லப்பட்டார்.கடாங்கா அதிகாரிகளும், பல்வேறு ஏகாதிபத்திய ஏஜெண்டுகளும் பார்த்திருக்க, பெல்ஜிய காப்டன் தலைமையிலான தண்டனை நிறைவேற்றக் குழு, லுமும்பாவையும், அவரது நெருங்கிய தோழர்களான எம்போலோ,ஒகிட்டோ ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

அடுத்த சில மணி நேரங்களில், பெல்ஜிய காவல்துறை அதிகாரிகளின் குழுவொன்று, புதைக்கப்பட்ட லுமும்பாவின் உடலை தோண்டியெடுத்து, சுரங்க நிறுவனங்களால் வழங்கப்பட்ட அமிலத்தில் எரித்து சாம்பலாக்கியது. கொலைக்குற்றத்தின் சிறு ஆதாரத்தைக் கூட அவர்களது எஜமானர்கள் விட்டு வைக்க விரும்பவில்லை. ஆனால், அவர்கள்து முயற்சிகள் வெற்றி பெறவில்லை. லுமும்பாவை யார் கொலை செய்தார்கள், யார் காங்கோ மக்களின் நம்பிக்கைகளை சிதைத்தார்கள் என்பதை இன்று உலகம் அறியும்.

இரத்தத்தை விலை கொடுத்து பெற்ற பாடம்

“காங்கோவை ஆதிக்கம் செய்ய அமெரிக்கா எப்பொழுதும் முயன்று வந்துள்ளது. அங்கே ஐ.நாவின் படைகளைக் கொண்டு அனைத்து வகையான அரக்கத்தனங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. காங்கோவின் தேசிய நாயகன் லுமும்பாவை படுகொலை செய்து, சட்டப்பூர்வமான காங்கோ அரசை கவிழ்த்துள்ளது. தனது கைப்பொம்மையான ஷோம்பேயை காங்கோ மக்களின் மீது திணித்து, காங்கோவின் தேசிய விடுதலை இயக்கத்தை ஒடுக்குவதற்காக கூலிப்படைகளை களமிறக்கியுள்ளது. அமெரிக்காவின் நோக்கம் காங்கோவை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. மாறாக ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் சுற்றி வளைப்பதேயாகும். குறிப்பாக, புதிதாக விடுதலை பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளை தனது நவ காலனிய சங்கிலிகளால் பிணைப்பதேயாகும்.”

- 1964, நவம்பர் 28- ஆம் நாள், மாவோ வெளியிட்ட “அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான காங்கோ மக்களை ஆதரிக்கும் அறிக்கையிலிருந்து”…

லுமும்பா படுகொலை செய்யப்படும் பொழுது, அவரது வயது 35 மட்டுமே. அவர் பதவியேற்று சில மாதங்களே கடந்திருந்தன. அவர் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். காங்கோவில் வெவ்வேறு அமைப்புகள் நவ காலனிய சக்திகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட முயன்றன. ஆனால், லுமும்பா படுகொலையையொட்டி ஏற்பட்ட சிக்கலான நிலைமைகளால், அவர்களது போராட்டம் ஒரு தீர்மானகரமான ஆயுதந்தாங்கிய புரட்சிகர யுத்தமாக வளர்ச்சியடையவில்லை. ஐ.நா படைகளும், வெள்ளைக் கூலிப்படைகளும், அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட மொபுடுவின் காங்கோ இராணுவத்துடன் இணைந்து மக்களின் எதிர்ப்பை கடுமையாக ஒடுக்கினர்.

சிறிது காலத்தில், மொயிசே ஷோம்பே ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட புதிய அரசை அமைத்தான். ஆனால், அந்த ஆட்சி அதிக காலம் நீடிக்கவில்லை. ஷோம்பேயின் ஆட்சியைக் கவிழ்த்த மொபுடு, அடுத்த பல பத்தாண்டுகளுக்கு ஈவிரக்கமின்றி மக்களை ஒடுக்கியும், சொத்துக்களை கொள்ளையடித்தும் ஆட்சி நடத்தினான். ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து காங்கோவின் வளம் மிகுந்த தாது வளங்களை தமது கரங்களில் வைத்துக் கொள்ள முயன்றாலும், அவர்களுக்கிடையிலான சதிகளும், உட்சண்டைகளும், காங்கோவை மீண்டும் போரினாலும், பிரிவினையாலும் சிதறுண்ட தேசமாக்கியது.

இன்று, உலகின் பல்வேறு வகையான மக்களும், அமைப்புகளும், புரட்சியை சாதிக்கவும், தேச விடுதலையை சாதிக்கவுமான சவால்களை எதிர்கொண்டு நிற்கும் வேளையில், நமக்கு லுமும்பாவின் நாட்கள் ஏகாதிபத்தியம் மற்றும் நவகாலனியத்தின் குரூர அடக்குமுறைகளுக்கு உதாரணமாக விளங்குகின்றன.

ஆதாரங்கள்:

  • மார்க்சிஸ்ட் தளத்தில் உள்ள லுமும்பாவின் எழுத்துக்கள்
  • நவ காலனியத்தின் ஆதரவாளர்கள், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி வெளியீடு
  • லுமும்பாவின் மரணம், ஜான் ஹென்ரிக் கிளார்க்
  • லுமும்பா: கடைசி ஐம்பது நாட்கள், ஹெய்ன்ஸ்,ஜி மற்றும் டோன்னே, குரோவ் வெளியீடு, நியூயார்க், 1969
  • நச்சுமரத்தின் பைபிள், பார்பரா கிங்சால்வர், ஹார்ப்பர் பெரனியல் நூலக வெளியீடு, 1999
  • கீழ்த்தரமான வேலைகள் 2: ஆப்பிரிக்காவில் சி.ஐ.ஏ, எலன் ரே, வில்லியம் ஷாப், கார்ல் வென் மீட்டர், லூயிஸ் உல்ஃப் மற்றும் லைல் ஸ்டுவர்ட் ஆகியோரால் தொகுக்கப்பட்டது, 1979
  • லுமும்பாவின் படுகொலை, லுடோ டே விட்டே, வெர்சோ வெளியீடு, ஜூன் 2001
  • லுமும்பா குறித்த திரைப்படத்தை www.zeitgeistfilm.com இணையதளத்தில் காணலாம்.

ஜூலை 2001 புரட்சிகரத் தொழிலாளி செய்தித்தாளில் மேற்காணும் கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது.

பி.கு:

www.zeitgeistfilm.com இணையத்தளம் செயல்பாட்டில் இல்லை என்றே தொடுப்பில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, லுமும்பா திரைப்படத்தைக் காண விரும்புவர்கள், இந்த torrent-ல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு சிக்கலான அரசியல் வரலாற்றை நுட்பமான காட்சிகள் மூலமும், தொய்வில்லாத திரைக்கதையின் மூலமும், திரைப்படம் அழுத்தமாக விளக்குகிறது. எனினும், லுமும்பாவின் கொந்தளிப்பான அரசியல் வரலாறு குறித்த குறைந்தபட்ச அறிமுகமின்றி ஒருவர் லுமும்பா திரைப்படத்தை முழுமையாக புரிந்து கொள்வது சற்று சிரமமானதென்றே கருதுகிறேன். எனவே, இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள், அதன் பின்னர் அவசியம் இத்திரைப்படத்தையும் காண வேண்டுமெனக் கோருகிறேன். லுமும்பா திரைப்படம் குறித்த கவிஞர் மாலதி மைத்ரியின் விமர்சனத்தை இங்கே காணலாம். ‘லுமும்பா இறுதி நாட்கள் என்ற பெயரில் அவரது இறுதி நாட்கள், படுகொலை குறித்த விரிவான மொழிபெயர்ப்பு நூல் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. நான் இன்னமும் அந்நூலை படித்துப் பார்க்கவில்லை. படித்தவர்கள் வாய்ப்பிருப்பின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

லுமும்பாவின் வரலாற்றைப் படிக்கும் பொழுது, நிகழ்காலத்தில் நேபாள மாவோயிஸ்டுக் கட்சி எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளும் நினைவுக்கு வருகின்றன. லுமும்பா ஒரு மார்க்சியரல்ல. ஆனால் அந்த மாவீரரின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டும் பொழுது, அவரது அர்ப்பணிப்பும், சலியாத போராட்ட உணர்வும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. காங்கோவைப் போல எண்ணற்ற காலனி நாடுகளின் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து, சுரண்டிக் கொள்ளையடித்து உருவாக்கப்பட்டதுதான் இன்றைய உலகமயப் பேரரசு. இன்றும் ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற எத்தனையோ நாடுகளை ஒட்டச் சுரண்டி, அதன் மக்களை பிணங்களாக்கி வருகிறது உலகமயம் என்ற பெயரிலான தனியார்மயம்-தாராளமயம். இந்த உலகமயப் பேரரசை அடித்து நொறுக்குவதுதான், அதற்கான பணியில் ஒவ்வொருவரும் தம்மை இணைத்துக் கொள்வது தான், லுமும்பாவுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் புதிய கலாச்சாரம், மார்ச் 2011 இதழில் வெளியானது)

ஆட்காட்டி தினமலரின் மடத்தனம்!

இன்றைய(15-02-2011) தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

படத்தை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்.

தினமலரின் ஆட்காட்டி வேலைகளை, பார்ப்பன சேவை குறித்து புதிதாக பெரிய விளக்கங்கள் எழுதத் தேவையில்லை.  ஆனால், இந்தச் செய்தியிலுள்ள பித்தலாட்டத்தையும், விஷமத்தனத்தையும், ஒருங்கே வெளிப்படும் மடத்தனத்தையும் கவனிக்க வேண்டுகிறேன்.

ஒன்று, தமிழகம், புதுவை ஆகிய இரு மாநிலங்களிலும் வெளிப்படையாக, பகிரங்கமாக ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகள் ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ எதிர்ப்பு இயக்கப் பிரச்சாரம் நடத்தி வருகின்றன. இந் நிலையில், ஏதோ அமராவதி வனச் சரகப் பகுதியில் மட்டும் இரகசியமாக நடத்தி வருவது போலவும், அதனை உளவுத் துறையினர் ஏதோ தமது உயிரைக் கொடுத்து கண்டறிந்த இரகசியம் போலவும் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆலை வாயில்கள், பள்ளிகள், கல்லூரிகள், வீட்டுக் குடியிருப்புகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என மக்கள் கூடுமிடங்களில் எனப் பிரச்சாரம் செய்து வரும் தோழர்களை நீங்கள் எங்கும் காண முடியும். ஆனால், தினமலருக்கோ உளவுத் துறை மூலம்தான் தகவல் கிடைத்திருக்கிறது. அல்லது, உளவுத்துறைக்கு எழுதிய மொட்டைக் கடிதத்தை சற்றே வடிவமைத்து தினமலர் ஆசிரியர் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்.

இரண்டு, பிரசுரத்தில் பெரிதாக வட்டம் போட்டுக் காட்டிய பின்னும், “இத்துண்டுப் பிரசுரத்தை வடிவமைப்பது யார் என்றோ, அல்லது தொடர்புக்கான தகவலோ ஏதும் அதில் இல்லை” என்று மடத்தனமாக எழுதியுள்ளது. நீங்கள் வட்டம் போட்டுக் காட்டியுள்ள இடத்திலேயே, “தொடர்புக்கு” எனத் தெளிவாக உள்ளதே ஆட்காட்டிகளே, போட்டுக் குடுக்குற அவசரத்துல கண்ணப் பொடதியிலயா வச்சுக்கணும்?

எதிரிகள் எரிச்சலடைவதும், ஆட்காட்டிகள் அவசரப்படுவதும் பிரச்சார இயக்கத்தின் வெற்றியையே காட்டுகின்றன. வெல்லட்டும் புரட்சிகரப் போராட்டம்!